கல்வியின் துவக்க வடிவத்தை கற்காதவர்கள்,அறநிலையங்கள் கல்விப் பணி செய்யக் கூடாது என்பது சிந்திக்க மறுப்பவர்களின் கூற்றாகும்
கல்வியின் துவக்க வடிவத்தை கற்காதவர்கள்,அறநிலையங்கள் கல்விப் பணி செய்யக் கூடாது என்பது சிந்திக்க மறுப்பவர்களின் கூற்றாகும்

கல்வியின் துவக்க வடிவத்தை கற்காதவர்கள்,அறநிலையங்கள் கல்விப் பணி செய்யக் கூடாது என்பது சிந்திக்க மறுப்பவர்களின் கூற்றாகும்

ஜூலை 13, 2025
அற நிலையங்கள் கல்விப் பணி செய்யக் கூடாதா? -ராமச்சந்திரவைத்தியநாத்
தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப்பிந்திய ஆட்சி மாற்றத்தில் அறநிலையத்துறை சார்பாக பல்வேறு கலைக்கல்லூரிகள் துவக்கப்பட்டதை நாம் அறிவோம். இவ்வாண்டிலேய பதினான்கு கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன என்ற செய்தி பெருமைகொள்ளத்தக்கது. தவிர காணிக்கையாக பெறப்பட்ட நகைகளை உருக்கி ரிசர்வ் வங்கியில் வைப்பு நிதியாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட இவ்விரு நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆலயத்திற்காக வழங்கப்பட்ட நிதியிலிருந்து இளைய தலைமுறையினர் கல்விச் செல்வத்தை பெற்றிடும் வகையில் கல்விச் சாலைகளை திறப்பது என்பது, எதற்காக ஆலயத்திற்கு நிதி வழங்கப்பட்டதோ அந்த நோக்கத்தையே முறியடித்திடும் என்ற விஷக்கருத்து பொதுவெளியில் ஒரு பிரிவினரால் திட்டமிட்டு விதைக்கப்பட்டு வருகிறது. பாஜகவுடன் இணைந்து செயல்படத் துவங்கிய அதிமுகவும் இந்த விஷமப் பிரச்சாரத்தை துவக்கியிருக்கிறது. அனைவருக்கும் கல்வியை அளிக்கலாகாது என்ற பாஜகவின் நோக்கத்தை நிறைவேற்றிடும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி பக்தர்களின் காணிக்கையில் கல்விக்கூடங்களை நிறுவலாகாது என எச்சரிக்கை விடுக்கிறார். மற்றொரு புறத்தில் தமிழகத்தில் செயல்பட்டு வரக்கூடிய ஆன்மீக அமைப்புகள் குறிப்பாக ஆதீனங்கள், சங்கர மடம், மேல்மருவத்தூர் அமைப்பு போன்றவை மெட்ரிக், ஸ்டேட் போர்டு, சிபிஎஸ்இ என்று வகைவகையான பள்ளிக்கூடங் களை மட்டுமின்றி கலை, அறிவியல், பொறியியல், மருத்து வக் கல்லூரிகளை முழுக்க முழுக்க வர்த்தக நோக்கில் நடத்தி வருகின்றன. ஆன்மிகத்தை பரப்பிடும் நோக்கில் உரு வாக்கப்பட்ட இந்த அமைப்புகள்இத்தகைய வர்த்தக ரீதி யிலான நடவடிக்கைகளின் பொருட்டு தங்கள் பக்தர்களி டமோ அல்லது வழிபடும் இறைவன் அல்லது இறைவி யிடமோ நேரடியாகவோ அல்லது சோழிஉருட்டியோ இல்லை வேறு வழிமுறையிலோ அனுமதி பெற்றதாக தெரியவில்லை. கடந்த காலங்களில் ஆலயங்கள் மற்றும் அறக்கட்ட ளைகளின் பயன்பாட்டுக்காக அளிக்கப்பட்டிருந்த நில புலங்களை மட்டுமின்றி நிதியாதாரங்களை ஒரு குறிப்பிட்ட பிரிவினரும், அவர்களின் துணையாட்களும் முறை கேடாகப் பயன்படுத்தி வந்ததைமுடிவுக்கு கொண்டு வரும்விதமாக 1928 இல் அன்றைய மதராஸ் மகாணத்தில் ஆட்சியில் இருந்த நீதிக் கட்சியினர் இந்தியாவிலேயே முதன் முறையாக இந்து அறநிலையத் துறைச் சட்டமியற்றி கோயில் நிர்வாகிகள், மடாதிபதிகள் போன்றோர் பொதுச் சொத்துக்களை தங்கள் விருப்பம்போல் அனுபவித்து வந்ததை முடிவுக்கு கொண்டு வந்தனர். அன்று முதல் இத்தகைய சக்திகள் ஆட்சியாளர்களுக்கு எதிராக பல்வேறு வடிவங்களில் போர் தொடுத்து வருகின்றனர்.இ தன் தொடர்ச்சியாகத்தான் இன்றைய தினம் ஆலய சொத்துக்களையும், ஆலயங்களையும் தனியாரிடம் அளித்திட வேண்டும் என்று மடாதிபதிகளும் ஆதீனங்க ளும் மட்டுமின்றி ஈஷா, ஸ்ரீஸ்ரீ போன்ற பன்னாட்டு பகாசுர குருமார்களும்,இதர இந்துத்துவ சக்திகளும் இக்கோரிக்கை யை எடுத்துக் கொண்டு, இது குறித்து விரிவான அளவில் தனி யார் நிர்வாகமே ஆலயங்களையும் அறக்கட்டளைகளை யும் பாதுகாக்க முடியும் என்ற உண்மைக்குப் புறம்பான பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் சமீபத்தில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சை பெரிய கோயிலை கபளிகரம் செய்யும் முயற்சி யை ஸ்ரீஸ்ரீ மேற்கொண்டதை தமிழ் மக்கள் ஒன்றிணைந்து முறியடித்தது இத்தருணத்தில் நினைவு கூரத்தக்கது. ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் சென்னப்பட்ட ணத்தில் உருவான இரண்டு அறக்கட்டளைகளையும் அதன் செயல்பாடுகளையும் காண்பது இதுபோன்ற அறக்கட்டளைகளையும் ஆலயங்களையும் யார் நிர்வகிப்பது, தவிர கல்விக்கூடங்களை உருவாக்கமுடியுமா போன்ற கேள்விகளுக்கான பதிலை நாமே அறியச் செய்திடும். வள்ளல் பச்சையப்பர் பெயரால் அமைந்துள்ள கல்விக்கூடங்களை அறியாதவர் இந்த மாநிலத்தில் இருக்க முடியாது. அவ்வாறே கும்பகோணம், திருவையாறு,கடலூர், சிதம்பரம், காஞ்சிபுரம் போன்று அன்றைய மதராஸ் மாகாணத்தின் பல்வேறிடங்களில் தெருக்களும் அவரது நிதியுதவியின் பேரில் உருவான பிராம்மணருக்கான பிரத்யேக அக்ரகாரங்களும் இன்றும் அவர் பெயரைக் கொண்டுள்ளது. பச்சையப்பரும் அவரது சகோதரி சுப்பம்மாளும் பல்வேறு ஆலயங்களில் திருப்பணிகளை மேற்கொண்டி ருக்கின்றனர். காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு பச்சை யப்பரின் திருமணத்தையொட்டி சிவகாமியம்மன், ஸ்ரீபாலி நாயகா இறை உருக்கள் வழங்கப்பட்டதோடு அதே ஆல யத்தில் கல்யாண மண்டபமும் கட்டப்பட்டிருக்கிறது. சிதம்பரம் நடராசர் கோயிலின் கிழக்கு கோபுரத் திருப்பணி சுப்பம்மாள் அவர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தவிர அங்கேயே பயணியருக்கான சுப்பம்மாள் சத்திரமும் உருவாகியிருக்கிறது. அவ்வாறே ராமேஸ்வரம் செல்லும் வழியிலும் பயணியருக்கான பல்வேறு சத்திரங்களை பச்சையப்பரும் சுப்பம்மாளும் நிறுவியிருக்கின்றனர். சிதம்பரம் சபாநாயகர் கோயிலுக்கு விழாக்காலங்களில் தேவதாசிகளின் நடன நிகழ்ச்சியை அனுமதிக்கலாகாது என்ற நிபந்தனையின் பேரில் நகைகளையும் பணத்தையும் பச்சையப்பர் வழங்கியிருக்கிறார். சபா நாயகர் கோயிலுக்கு புதிய தேரொன்றையும் வழங்கிய தோடு 1791 இல் பிரம்மோத்சவத்தையும் ஆனித் திரு மஞ்சனத்தையும் தன் செலவில் நடத்தியிருக்கிறார். பச்சையப்பர் தன் வாழ்நாளில் இறைப்பணிகளுக்கு மட்டுமே தன் செல்வத்தை அளித்து வந்திருக்கிறார் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. 1794 மே மாதத்தில் அவரது உயில் பௌனி நாராயண பிள்ளை அவர்களால் வெளி யிடப்பட்டது. சகோதரி சுப்பம்மாள், மனைவிமார்கள் மற்றும் இதர உறவினர்களுக்கு அளிக்கப்பட்டது போக ரொக்கம் பணம் 1,16,300 ஸ்டார் பகோடாவும், நிலுவையில் உள்ள 1,20,214 பகோடா அசலும் வட்டியுமாக இருப்பதை தர்மகாரியங்க ளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே உயிலின் சாராம்சமாக இருந்தது. பௌனி நாராயண பிள்ளை பச்சையப்பர் உயிலை அமல்படுத்தும் வகையில் பொறுப்பேற்று நாற்பதினாயிரம் பகோடா செலவில் சிதம்பரம் கோயில் புனருத்தாரணப் பணிகளை மேற்கொண்டார். இவரது மரணத்திற்குப் பின் அறங்காவலராக இருந்த இவரது மகன் அய்யா பிள்ளை 1802-03 இல் திருவிடைமருதூரில் பிராம்மணர்களுக்கான அக்ரகாரம் ஒன்றைநிறுவினார். பச்சையப்பருக்கு ஆண் வாரிசு எவரும் இல்லாததினால் உரிமைகோரி உற வினர்களும் மற்றவர்களும் வழக்குகளை தொடுத்து வந்தி ருக்கின்றனர். இடையில் 1822 இல் சிதம்பரம் தீட்சதர்களும் பச்சையப்பர் அறக்கட்டளையில் தங்களுக்கும் உரிமை இருப்பதாக வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். 1832 இல் அட்வகேட் ஜெனரலாக இருந்த ஜார்ஜ் நார்டனின் முயற்சி யால் அறக்கட்டளையை நிர்வகிக்க குழுவொன்று அமைக் கப்பட்டது. அதற்கேற்ப அய்யா சாஸ்திரி, மீனாக்ஷயா பிராம்மணி, ராகவ செட்டி, ராமானுஜலு நாயுடு, ஆதி நாராயண அய்யா, சீனிவாச பிள்ளை, ஆறுமுகம் முதலி, ஏகாம்பர முதலி, சொக்கப்ப செட்டி, ஆகியோர் அறக்கட்ட ளையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். சட்டப் போராட்டங்கள் இறுதியாக முடிவுக்கு வந்தது. துவக்கப்பள்ளியும், கல்விப் பணியின் துவக்கப் புள்ளியும் 1841 ஆகஸ்ட் 6 அன்று அன்றைய சென்னை உச்சநீதி மன்றம் அறக்கட்டளை கல்விக்கூடங்களை நடத்துவதும் ஒருவிதமான சமூகப் பணிதான் என்று தீர்ப்பு வழங்கி யது. இதற்கிடையில் நிர்வாகிகளில் முதல் ஐவர் மரண முற்றதால் வெம்பாக்கம் ராகவாச்சாரியார், எல்.வெங்கட பதி நாயுடு. தேசிகாச்சாரியார், வெங்கடராகவாச்சாரியார், வெங்கிடசாமி நாயுடு ஆகியோர் நீதிமன்றத்தால் அறக்கட்ட ளைக்கான உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். 1841 அக்டோபர் 9 அன்று அறக்கட்டளையின் முதல் கூட் டம் நடைபெற்றது. உடனடியாக 1842 ஜனவரியில் பாப்ஹாமின் பிராட்வேயில் மாதவாடகை ரூ 20 என்ற அடிப்படையில் வீடொன்றில் பி.ஜே.மெக்நாமியை தலைமை ஆசிரியராகவும் தவிர மூன்று இந்தியர்களை ஆசிரியர்களாகவும் கொண்ட பச்சையப்ப முதலியார் துவக்கப்பள்ளி வறிய இந்துக்களுக்கு கல்வியைப் புகட்டத் துவங்கியது. இதுவே பின்னாளில் ஆலவிருட்சமாய் பரவி நிற்கும் பச்சையப்பன் கல்வி நிறுவனங்களின் துவக்கப் புள்ளியாகும். பச்சையப்ப முதலியார் பிறப்புக்கு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர் பிறந்தவர் வியாசர்பாடி வினாயக முதலியார். 1850-51 இல் மானாம்பேடு வீராசாமி முதலியாரிடமிருந்து மயிலை தெற்கு மாடவீதியில் காலி மனையொன்றை வாங்கி சித்திரைச் சத்திரத்தை கட்டிய தோடன்றி 1851 இல் அறக்கட்டளையொன்றையும் நிறுவி னார். சத்திரத்தை பராமரிப்பது மட்டுமின்றி துவாதசி தினத்தன்று பிராம்மணர்களுக்கு போஜனம் செய்விப்பதை யும், கபாலீச்வரன் கோயில் உற்சவத்தில் வீதியுலாவில் தீபாராதனை காட்டுவதையும் தன் உயரிய நோக்கங்களாக அறக்கட்டளை கொண்டிருந்தது. இதனை நிர்வகிக்கும் வகையில் சைனா பஜாரில் கதவு எண் 247ஐக் கொண்ட கடையொன்றையும் நுங்கம்பாக்கத்தில் தோப்பு ஒன்றையும் வினாயக முதலியார் வாங்கியிருக்கிறார். இவையன்றி தனக்கு பரிசாகக் கிடைத்தவற்றையும், தான் வாங்கிய பொருட்களையும் சித்திரைச் சத்திரத்தில் காட்சிக்கு வைத்தார். அதனால் அச்சத்திரம் பொம்மைச் சத்திரம் என்ற பெயரையும் பெற்று விட்டது. அறுபத்து மூவர் உற்சவத்தின் போது அங்கே நடைபெறக்கூடிய பொம்மைக் காட்சிக்கு ஏராளமான மக்கள் வந்து செல்வதுண்டு. 1868வரை அவரே இந்த அறக்கட்டளையை நிர்வகித்து பிராம்மண போஜனத்தையும், தீபாராதனையும் செய்வித்து வந்திருக்கிறார். மரணத்திற்கு முன்னர் இரண்டாவது மனைவியின் மகன் சோமசுந்தர முதலியாரையும், மருமகன் திருவேங்கட முதலியாரையும் அறக்கட்டளையின் நிர்வாகி களாக நியமித்ததோடு சோழிய வெள்ளாள சாதியினர் நால்வரை உறுப்பினர்களாகவும் நியமனம் செய்திருக்கிறார். வினாயக முதலியாரின் மரணத்திற்குப் பின்னர் வழக்கம்போல் அறக்கட்டளை நிர்வாகம் பூசலுக்கும் வழக்கு களுக்கும் உள்ளாகியது. 11.03.1932 இல் அறக்கட்டளை உறுப்பினர்கள் முதன் முறையாக நீதிமன்றப் படிகளில் கால் பதித்தனர். குடும்ப உறுப்பினர்கள் மட்டுமா சோழிய வெள்ளாள சாதி சங்கத்திற்கு மரபுரிமை உண்டா இல்லையா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பட்டன. பெருந்தொகை யினையும் அளப்பரிய சொத்தினையும் அறக்கட்டளை கொண்டிருப்பதால் வழக்கு தொடர்கதையாகவே நீடித்து வந்தது. 1985 இல் வழங்கப்பட்ட தீர்ப்பு குடும்பத்தார் உறுப்பி னர்களாக நீடிப்பதை உறுதி செய்ததோடு, அறக்கட்ட ளையின் நோக்கங்களான மயிலை சத்திரத்தில் துவாதசி தினத்தன்று பிராம்மண போஜனம், கபாலி கோயில் பிரம்மோத்சவ காலத்தில் சத்திரத்தில் விளக்கு ஏற்றி அலங்கரிப்பது, வீதியுலாவின் போது ஒவ்வொரு முறையும் சத்திரம் முன்னர் தீபாராதனை செய்வது, சத்திரத்தை பராமரிப்பது ஆகியவற்றை மாற்ற முடியாது என்பதை திட்டவட்டமாக கூறியது. இந்த நோக்கங்களுக்காகவே இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டிருப்பதால் இதைத் தவிர இதர தர்மகாரியங்களுக்கோ அல்லது மத கைங்கர்யங்களுக்கோ இடமில்லை என்பதையும் நீதிமன்றத் தீர்ப்பு தெளிவு படுத்தியது. அரசுப் பள்ளிக்கு நன்கொடை இடையில் அலமாதியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு அறக்கட்டளை வாயிலாக ரூ 20 லட்சம் நன்கொடை வழங்கியது குறித்தும் வழக்கு தொடரப் பட்டது. இந்த அறக்கட்டளை தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குடும்ப உறுப்பினர்கள் ஸ்ரீ வியாசர்பாடி வினாயக முதலியார் தர்ம பாரிபாலன சங்கம் எனும் அமைப்பினை உருவாக்கியதோடு, சோழிய வெள்ளாள சமூக உறுப்பி னர்களுக்கு எதிராகவும், குழந்தைகளின் கல்விக்காக நிதியுதவி செய்வது என்பது அறக்கட்டளையின் நோக்கங்களையே தகர்க்கிறதென்றும் தடையாணை பெற்றிருக்கின்றனர். இவையாவுமே 2010 இல் முடிவுக்கு வந்தது என்றே சொல்ல முடியும். ஏழை எளியோருக்கு கல்விக்கான நிதியுதவி அளிப்பது என்பது பிராம்மண போஜனம் அல்லது ஆலய பூசைகளைக் காட்டிலும் எந்த விதத்திலும் உன்னதக் குறைவாக கருதலாகாது இன்னும் சொல்லப் போனால் அறக்கட்டளையின் நோக்கங்கள் உயர்வானதெனில் இவையும் அதற்கு நிகரானதுவே என்று 2010 மார்ச் 30 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வியாசர்பாடி வினாயக முதலியார் அறக்கட்டளை வழக்கிற்கு மட்டுமல்ல, இந்த தேசத்தில் உள்ள அனைத்து சமூகம் மற்றும் மதஞ்சார்ந்த அறக்கட்டளைகளுக்கும் பொருந்துவ தாகவே உள்ளது. ஆயின் அறக்கட்டளை கல்விக்கூடம் ஒன்றினை உருவாக்கியிருப்பின் வியாசர்பாடி வினாயக முதலியாரை பச்சையப்பரைப் போன்று கல்விபெற்றோர் அனைவருமே போற்றி வந்திருப்பர். ஆலயநிதியினை கல்விக்கூடங்கள் உருவாக்கிட பயன்படுத்தலாகாது என்று வாதிடுவோருக்கு இறைப்பணி குறித்து எவ்வித அக்கறையுமில்லை. அதேதரு ணத்தில்இந்த நாட்டில் உள்ள கோடானுகோடி ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியறிவு பெறலா காது என்ற ஒற்றை நோக்கத்தையே அவர்கள் கொண்டி ருக்கின்றனர். இந்த அடிப்படையில்தான் மயிலை தெற்கு மாடவீதியில் உள்ள சித்திரைச் சத்திரமும் அங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியங்களும் பொம்மைகளும் மட்டுமின்றி அவற்றை நிறுவியவியாசர்பாடி வினாயக முதலியாரும் சமூக ஊடகங்களில் பெரிதும் சிலாகிக்கப்படு கிறார். சாதாரண அடித்தட்டு மக்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள சோழிய வெள்ளாள சங்கம் இத்தந்திரத்தை முறியடித்து வறிய நிலையில் உள்ளோர் ஏற்ற முறையில் கல்வி கற்றிட கல்விக்கூடங்களை உருவாக்குவதே இன்றைய காலகட்டத்திற்கேற்ப பொருத்தமான செயல் பாடாக அமையும். இதுதான்வியாசர்பாடி வினாயக முதலியாருக்கும் அறக்கட்டளைக்கும் சென்னைப் பட்ட ணத்து வரலாற்றில் அகற்ற முடியாத இடத்தை அளித்திடும்.

