ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் அதிமுக எம்எல்ஏ.வின் தோட்டத்தில் வெட்டி தலை துண்டிக்கப்பட்டு படுகொலை -ஒரு கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!
சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் அதிமுக எம்எல்ஏ.வின் தோட்டத்தில் வெட்டி தலை துண்டிக்கப்பட்டு படுகொலை

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் அதிமுக எம்எல்ஏ.வின் தோட்டத்தில் வெட்டி தலை துண்டிக்கப்பட்டு படுகொலை -ஒரு கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

06/08/2025 திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் சிறப்பு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் சண்முகவேல். இவர் நேற்று இரவு வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது இரவு 11.30 மணியளவில் குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில் சிக்கனூர்த்தி பகுதியில் அமைந்துள்ள அதிமுக மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தோட்டத்தில் தந்தை, மகன் இடையே சண்டை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு ஆய்வாளர் சண்முகவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார். அவருடன் காவலர் ஒருவரும் சென்றதாக சொல்லப்படுகிறது. சம்பவ இடத்தில் மது அருந்திவிட்டு சண்டையில் ஈடுபட்ட நபர்களை சண்முகவேல் கண்டித்து சண்டையை நிறுத்தியதாக சொல்லப்படுகிறது.

சண்டை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து சண்முகவேல் அப்பகுதியில் இருந்து புறப்படத் தயாரான நிலையில், திடீரென ஒரு கும்பல் காவல் ஆய்வாளர் மீது சரமாரியாக வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் SI சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

அப்போது தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான மோதலை தடுக்க முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேலும் ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்த தோட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தந்தை- மகனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் குடும்பத்திற்கு நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் கூறியதாவது,
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிப்புரிந்துவந்த சண்முகவேல் (57) மற்றும் ஆயுதப்படைக் காவலர் அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று இரவு 11.00 மணியளவில் ரோந்துப் பணியின்போது சிக்கனூத்து அருகில் தனியரின் தோட்டத்து சாலையில் நடந்த அடிதடி பிரச்சனை குறித்து தகவல் அறித்ததும் விசாரிக்க சம்பவ இடத்திற்குச் சென்றபோது அடிதடி பிரச்சனையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.
சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். சண்முகவேல் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.



